கவனிப்பாளராக செயற்பட முடிவெடுத்துள்ள முன்னாள் அமைச்சர்
இலங்கையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தாம் ஒரு கவனிப்பாளராக (observer) இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா (Nalaka Godahewa) தெரிவித்துள்ளார்.
தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்துக்கு புதிய அரசாங்கம் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் 5 வருடங்களுக்கு முன்னர் அரசியலில் பிரவேசித்து, தமது முதலாவது தேர்தலில் 325,479 வாக்குகளைப் பெற்று, அரச மற்றும் அமைச்சரவை அமைச்சராக உயர்ந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிகள்
பின்னர், இரண்டரை வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளான போது அவர்களுடன் நிற்பதற்காக, அனைத்து பதவிகளையும் துறந்து எதிர்க்கட்சியில் இணைந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தற்போது ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துள்ளது. இதன்படி புதிய அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.
ஸ்திரத்தன்மையே இலங்கைக்கு அவசியம்
இந்தநிலையில், ஸ்திரத்தன்மையே இலங்கை நாட்டிற்கு மிகவும் அவசியமானது, எனவே ஒரு பார்வையாளராக இருப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடஹேவா முன்னர் 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை ஆதரித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர்கள் பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே, திஸ்ஸ விதாரண போன்றோரும் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
— Dr.NalakaGodahewa(PhD,MBA, BSc.Eng,LLB, FCIM,FCMA) (@GodahewaNalaka) October 5, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |