முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு பிணை
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர , நேற்றைய தினம்(30) நீதிமன்ற உத்தரவின்பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்க காணியொன்றை மோசடியான முறையில் தனியாருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளக்கமறியல்
வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் நீண்டகாலம் தலைமறைவாக இருந்து பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த பிரசன்ன ரணவீர, கடந்த ஐந்துமாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் குறித்த வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டடபோது ஐந்து லட்சம் ரொக்கப்பிணை மற்றும் தலா ஐந்து லட்சம் பெறுமதியான ஐந்து சரீரப் பிணைகளில் பிரசன்ன ரணவீர மற்றும் இன்னொரு சந்தேக நபரான சரத்குமார எதிரிசிங்க ஆகியோரை விடுவிக்குமாறு நீதிபதி நயனா செனவிரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சந்தேக நபர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிபந்தனை
மேலும் சந்தேக நபர்களுக்கு புதிய கடவுச்சீட்டு விநியோகிக்க வேண்டாம் என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத்திணைக்கள பணிப்பாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவில் முன்னிலையாகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.



