தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது: ந.சிவசக்தி (Photos)
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வினை பெற முடியாமல் தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகளை பெற முடியாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
கல்முனை கிருஸ்டா இல்ல மண்டபத்தில் நேற்று(27) இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றினைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.
தமிழ் மக்களின் தியாகங்கள்
இதேவேளை கல்முனை பிரச்சினை தொடர்பாக கடந்த 29 வருடங்களாக இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை போராடியிருக்கிறார்கள்.
இதனை தரமுயர்த்துவதா, இல்லையா என்பதை முதலில் வினவுங்கள். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காக உயிர் தியாகம் செய்த அத்தனை தமிழ் உறவுகளும் தியாகிகளேயாவர்.
இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காகவே உயிர் நீத்தார்கள், இதில் பலர் தமிழ்க்கட்சிகளில் இருந்தும் உயிரிழந்துள்ளார்கள்.
கடந்த 1983ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எப்.எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து உறுப்பினர்கள் பலர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உயிரிழந்துள்ளனர்.
உறவுகளை இழந்தவர்களின் துயரம்
மனைவி, கணவனையும், தாய், தந்தை தனது பிள்ளையையும், சகோதரி சகோதரனையும் இழந்துள்ளார்கள். குடும்பத்திலிருந்து ஆறு உறவினர்கள் மற்றும் ஐந்து உறவினர்கள் நான்கு உறவினர்கள் என பலரும் தமது உறவுகளை இழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்பானது தமிழர்களின் விடிவுக்காக செய்த மிகப்பெரிய தியாகமாகும். இவர்கள் உட்பட வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் விடிவுக்காக உயிர் துறந்த அனைவருமே தியாகிகளாவர்.
தமிழ் மக்களுக்கான விடுதலை
இந்த தியாகிகளை நாம் நினைவு கூறுவது நமது கடமையாகும். நமது சமூகத்தின் விடுதலையை நோக்கி சர்வதேசம் சென்று கொண்டிருக்கின்றது.
இந்த விடுதலையானது வலுப்பெறுமே தவிர நலிவடைந்து விடாது. இதற்கு தமிழ் உயிர்களை பலி கொடுத்த உறவுகள் செய்த தியாகமும் இன்று சர்வதேச முன்னெடுப்புக்களுக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் புலம்பெயர் வாழ் கட்சி உறுப்பினர்கள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் மற்றும் கல்முனை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான ஹென்றி மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.







