தமிழர்களை காட்டிக்கொடுத்தால் எந்த பெயரிலும் கட்சி அமைக்க முடியுமா: அரியநேத்திரன் ஆதங்கம்
தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தால் எந்த பெயரிலும் எந்த கட்சியையும் அமைக்க முடியுமா என ட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயரை நாங்கள் பயன்படுத்தினால் கைதுசெய்யப்படும் நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற பெயரில் சிலர் சுதந்திரமாக செயற்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கை
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட இயக்கம்.
புலிகள் என்ற பெயரை நாங்கள் பயன்படுத்தமுடியாது. நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் என்றதிலிருந்து ஈழத்தை எடுத்துவிட்டு மக்கள் என்று போட்டு ஒரு கட்சியுள்ளது.
அந்த கட்சி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ற பெயரில் சுதந்திரமாக நாடாளுமன்றத்திலும் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.
இது என்ன நீதி. தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்தால் எந்த பெயரிலும் எந்த கட்சியையும் அமைக்கலாம்.
தமிழர்கள் சுதந்திரமாக போராடியதற்காக அந்த பெயரை பாவித்தால் எங்களை கைதுசெய்கின்றார்கள்.
11பேர் கைது
கடந்த கார்த்திகை 27இல் பல்வேறு இடங்களில் உள்ள துயிலுமில்லங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
வடமாகாணத்தினை பொறுத்த வரையில் பல இடங்களில் மஞ்சள் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மஞ்சள் ,சிவப்பு கொடிகளைக்கூட அகற்றக்கூறினார்கள். இவ்வாறான நிலையில் 11பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
நாங்கள் இன்று மனித உரிமைகள் தினத்தை அனுஸ்டித்துக்கொண்டுள்ளோம். அவர்கள் என்ன காரணத்திற்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்கள் என்பது தெரியாது.
நாங்கள் ஒவ்வொரு மனித உரிமைகள் தினத்திலும் குரல் எழுப்புகின்றோம். ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் கைதுசெய்யப்படுகின்ற நிலைமையே காணப்படுகின்றது.
சர்வதேசத்திற்கும் பல விடயங்களை எடுத்துக்கூறுகின்றோம். சர்வதேசமும் கண்ணை மூடிக்கொண்ட இலங்கை அரசாங்கத்தினை காப்பாற்றுகின்ற சர்வதேசமாகவே இருக்கின்றது.
சர்வதேசத்தினை நம்பியே இன்று ஈழத்தமிழர்கள் கோரிக்கைகளை முன்வைத்துவருகின்றனர். ஆனால் சர்வதேசமும் இலங்கை அரசாங்கத்தினை காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றது.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
