பொது நிர்வாக அமைச்சு- முன்னாள் சுகாதார அமைச்சர்: வலுவடையும் முறுகல் நிலை
பொது நிர்வாக அமைச்சுக்கும் முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமணவுக்கும் இடையில் முறுகல் தீவிரமாகியுள்ளது.
கொழும்பு 7 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் தொடர்ந்தும் தங்கியிருப்பது தொடர்பாக ஏற்பட்ட கடுமையான சர்ச்சை தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
தற்போது எதிர்க்கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர், இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது அவர் ஆக்கிரமித்திருந்த உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பேராசிரியர் ஜெயசுமண கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த குடியிருப்பை காலி செய்திருக்க வேண்டும். எனினும் அவர் தொடர்ந்து அந்த குடியிருப்பை ஆக்கிரமித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது தனது தனிப்பட்ட வீடு மற்றும் அலுவலகம் இரண்டும் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமக்கு தங்குவதற்கு வேறு இடம் இல்லாததால், அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க அனுமதிக்குமாறு அவர் கோரியுள்ளார். பேராசிரியர் ஜயசுமண இந்த விடயம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து அது தொடர்பான விசாரணைகளை முடிக்கும் வரை மேலதிக நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என ஆணைக்குழு அமைச்சின் செயலாளருக்கு கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.
இதற்கிடையில் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் தொடர்ந்தும் தங்கியிருந்தமை தொடர்பில் அமைச்சினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் இந்த வாரம் வெளியேற்றல் தீர்ப்பை வழங்கினார்.
இதனையடுத்து ஜயசுமண, நீதிமன்றம் அதன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகளை எதிர்வரும் செப்டம்பர்
மாதம் 19ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அறிவித்தல்
அனுப்பியுள்ளது.