நிதி மோசடி:முன்னாள் ஜனாதிபதியின் பாரியாருக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை
ஹொண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியாரான ரோசா போனில்லா நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன் அவருக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வறிய குடும்பங்களின் பிள்ளைகளின் நலன்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பணம்
போனில்லாவின் கணவரான போர்ஃரியோ லோபோ சோசா கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஹொண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியை தனது கடன் அட்டைக்கான கட்டணங்களை செலுத்தவும் பிள்ளைகளின் பாடசாலை கட்டணத்தை செலுத்தவும் நிர்மாணத்துறையில் முதலீடு செய்யவும் போனில்லா பயன்படுத்தியுள்ளார்.
மோசடி செய்யப்பட்ட இந்த பணம் 7 லட்சத்து 56 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு நிகரானது என கூறப்படுகிறது. நிதி மோசடி மற்றும் தவறாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் போனில்லாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஏற்கனவே வழங்கப்பட்ட 58 ஆண்டு சிறைத்தண்டனை இடைநிறுத்திய உயர் நீதிமன்றம்
இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக இதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் போனில்லாவுக்கு 58 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் அந்த வழக்கில் பலவீனங்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பை இடைநிறுத்தி இருந்தது.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், போனில்லாவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிககப்பட்டுள்ளது.