ஹொண்டுராஸ் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது
மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸ் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டஸ் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நாடு கடத்துமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு தலைநகர் டெகுசிகல்பாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது ஆணை பிறப்பிக்கப்பட்டதும் அவர், கைவிலங்குகளுடன் அவரது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். ஹெர்னாண்டஸ் 2014 முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை ஹொண்டுராஸை ஆட்சி செய்தார்.
இந்த நிலையில் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் அவரது இளைய சகோதரர் டோனி ஹெர்னாண்டஸ், கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல்காரர் ஜோவாகின் "எல் சாப்போ" குஸ்மான் தனிப்பட்ட முறையில் டோனி ஹெர்னாண்டஸிடம் 1 மில்லியன் டொலர்களை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பணத்தை, டோனி ஹெர்னாண்டஸ், தமது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி ஜுவான் ஒர்லாண்டோ ஹெர்னாண்டஸ்க்கு அனுப்புமாறு கூறியதாக விசாரணையின் போது தகவல் வெளியாகியுள்ளது.
ஹொண்டுராஸ் பல ஆண்டுகளாகத் தென் அமெரிக்காவிலிருந்து, அமெரிக்காவிற்குக்
கடத்தப்படும் போதைப் பொருட்களுக்கான முக்கிய போக்குவரத்து நாடாக இருந்து
வருகிறது.