வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
மரணத்திற்கு முன்னதாக செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவரும் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவருமான தேசமான்ய லலித் கொத்தலாவல, சட்டத்தரணிகள் குழுவினால் அவரது வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக நேற்றும் உயர்நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
மனு விசாரணை
முன்னதாக இதே தகவலை லலித் கொத்தலாவலையின் உறவினர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இரண்டாவது தடவையாக, கோல்டன் கீ வைப்பாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் மார்கோ பெரேரா நேற்று இந்த தகவலை நீதிமன்ற அமர்விடம் தெரிவித்துள்ளார்.
கோல்டன் கீ வைப்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சட்டத்தரணிகள் குழுவொன்று, லலித் கொத்தலாவலவை, கட்டுப்படுத்தி வைத்திருந்தது என்று தகவல் தொடர்பில் மேலதிக சமர்ப்பிப்புக்களுக்கு மனுதாரர் அனுமதி கோரினார்.
இந்தநிலையில் மனுவின் அடுத்த விசாரணை 2024 மே 08ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீண்ட கால மோசடி
இலங்கையின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில்; சிகிச்சை பெற்று வந்தபோதே அவர் மரணமானார்.
கோல்டன் கீ கிரெடிட் நிறுவனம் ஒரு காலத்தில் கடன் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிதி நிறுவனமாக செயற்பட்டது.
எனினும் 2008 ஆம் ஆண்டில், இந்த அமைப்பு 1999 ஆம் ஆண்டு முதல் நீண்ட கால மோசடித் திட்டத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட நிலையில், அதன் வைப்பாளர்கள் பல பில்லியன் ரூபாய்களை இழந்தனர்.




