சுபுன் ஷஷேந்திர பிணையில் விடுவிப்பு
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஏனைய இருவரும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர்கள் இன்று(13.11.2023) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிகார சபையின் வேலைத்திட்டம்
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் ஷஷேந்திர பத்திரகே உட்பட மூவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வேலைத்திட்டம் ஒன்றிற்காக 10 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிவையில் 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிமன்றால் உத்தரவிடப்பட்டது.
நீதிவான் உத்தரவு
மேலும், சந்தேகநபருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாததை கருத்தில் கொண்டு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் அவரை பிணையில் அனுமதித்துள்ளார்.
அவர் இலஞ்சம் கோரியதற்கும், பெற்றுக்கொண்டதற்கும் போதிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதை பிரதான நீதவான் கவனித்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவருடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சமிந்த அனுருத்த பொல்கம்பல மற்றும் டெனிசன் பொன்சேகா ஆகியோரை எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார் .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |