இந்தோனேசியாவில் காட்டுத் தீயால் உருவான புகை மூட்டம்: ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக அணைக்க முடியாமல் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயினால் எழுந்த நச்சுப் புகை மூட்டம் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை சுமார் 1,75,000 மக்கள் கடுமையான சுவாச நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் லேசான இருமல், மூச்சுக்குழாய் அழற்சி முதல் தீவிரமான நியூமோனியா வரை பாதிக்கப்பட்ட 40,000இற்கும் மேற்பட்டோர் சிறு குழந்தைகள் ஆவர்.
வழக்கமான வறட்சி காலத்துடன் சேர்ந்து உருவாகியுள்ள சக்திவாய்ந்த "எல் நினோ" காரணியே இந்த அளவுக்கு நிலைமை மோசமடையக் காரணம் எனக் கூறப்படுகிறது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை சுமார் 8,95,657 ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் கருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் 734,000இற்கும் அதிகமான தீப்பற்றல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த அடர்ந்த நச்சுப் புகை அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் வரை பரவியுள்ளதால் அப்பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து "ஆரோக்கியமற்ற" நிலையை எட்டியுள்ளது.
இதன் காரணமாக பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
மேலும், அழியும் ஆபத்தில் உள்ள 'ஒராங்குட்டான்' போன்ற அரிதான வனவிலங்குகளும் மூச்சுத்திணறி உயிரிழந்து வருகின்றன.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இந்தோனேசிய அரசாங்கம் 54,000-க்கும் மேற்பட்ட அதிகாரிகளையும், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களையும் பயன்படுத்தி வான்வழியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அத்துடன் ஜப்பான் நாட்டின் கூட்டுறவோடு செயற்கை மழை பொழிய வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேவேளையில், ஒவ்வொரு ஆண்டும் தொடரும் இப் பேரழிவைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, உள்ளூர் பழங்குடியினரும் சமூக அமைப்புகளும் அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன.