18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்! வெளியான புதிய புள்ளிவிபரங்கள்
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி வரையான சுற்றுலாப் பயணிகள் தொடர்பான புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
குறித்த புள்ளிவிபரங்களின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 75,657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதனுடன் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,801,151 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன் அந்த எண்ணிக்கை 4 இலட்சம் எல்லையை நெருங்கியுள்ளது.
இதுவரை இந்தியாவிலிருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 396,274 ஆகும்.
அத்துடன், ஐக்கிய இராச்சியம் (167,886), ரஷ்யா (125,950), ஜேர்மனி (111,677) மற்றும் சீனா (108,040) ஆகிய நாடுகளிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
18 இலட்சம்
அதுமட்டுமின்றி, பிரான்ஸ் (90,250), அவுஸ்திரேலியா (81,040), நெதர்லாந்து (53,922) மற்றும் அமெரிக்கா (50,027) ஆகிய நாடுகளிலிருந்தும் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இத்தாலி (39,932), கனடா (37,606), ஸ்பெயின் (36,430), போலந்து (36,389) ஆகிய நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு 20 இலட்சத்திற்கும் (2,053,465) அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர்.
இலங்கைக்கு இறுதியாக அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த ஆண்டு 2018 ஆகும். 88 அப்போது 23 இலட்சத்திற்கும் (2,333,796) அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.
இலங்கையின் வருடாந்த சுற்றுலாப் பயணிகள் வருகை 20 இலட்சம் எல்லையை கடந்து 4 சந்தர்ப்பங்களில் உள்ளது.அதாவது 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் ஆகும்.



