வெளிவிவகார அமைச்சருக்கும் ஐ.நா பொதுச்செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டாரசிற்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 81ஆவது கூட்டத்தொடருக்கு மத்தியில், இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முனைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் விஜித தெரிவித்துள்ளார்.

மேலும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அதிக ஆதரவை வழங்கும் வகையில் சர்வதேச நிதி அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்பு குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நா பொதுச்செயலாளருடனான இந்தக் கலந்துரையாடல் மிகவும் சுமுகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்ததாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.