நுவரெலியா மாவட்டத்திற்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மத்திய நிலையம் திறந்து வைப்பு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய நிலையம் பொது மக்கள் பாவனைக்காக ஞாயிற்றுக்கிழமை (07.01.2024) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் 05 ஆம் மாடியில் இந்த மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டு தொழிலாளர் மற்றும் வௌநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கடந்த வருடம் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தையொட்டி நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது அப்பகுதி சிறார்களினால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பிரதான சேவைகள்
இந்த மத்திய நிலையத்தினூடாக வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக பணியகத்தின் பதிவுகளை பெற்றுக்கொள்ளல், வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான முறைப்பாடுகளை முன்வைத்தல், பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் வழங்கல் என்பன இந்த புதிய மத்திய நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகராகரும் வடிவேல் சுரேஷ் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாநகர சபை விசேட ஆணையாளர் சுஜீவ போதிமான, முன்னாள் மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன , நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.