காசாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு: ஐ.நா எச்சரிக்கை
காசாவில் உணவுப் பொருட்கள் வேகமாக தீர்ந்து வருவதாக ஐ.நா. உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபீர் எடேஃபா கருத்து தெரிவிக்கையில்,
”இரண்டு வாரங்களுக்கு முன்பாக போதுமான அளவு உணவு கையிருப்பு இருந்தது.
ஆனால், தற்போது உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறை அதிகரித்துள்ளது. காசா நகரை விட்டு மக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் கெடு காரணமாகவே தற்போது மிக வேகமாக உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
வரிசையில் காத்திருக்கும் மக்கள்
உணவுப் பொருட்களை மதிப்புக் கூட்டும் 5 தொழிற்சாலைகளில் ஒன்று மட்டுமே தற்போது இயங்குகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எரிபொருள் மற்றும் மின்சார பற்றாக்குறை காரணமாகவும் மற்ற இயந்திரங்கள் இயக்கப்படவில்லை.
நெருக்கடியான இந்த தருணத்தில் விற்பனையகங்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள் கிடைக்கச் செய்வதே ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் முன் உள்ள சவாலாகும். இயங்கக்கூடிய சில பேக்கரிகளின் முன் மிக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
மேலும், 10 லட்சம் யூரோ மதிப்புள்ள உணவுப் பொருட்களை காசாவுக்கு அனுப்பிவைக்க ஸ்பெயின் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.