திருகோணமலையில் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை: கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
திருகோணமலை, கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காலாவதியான மற்றும் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ஒன்பது வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மல்போறுவ, மதவாச்சிய, கோமரங்கடவல, கல்யாணபுர மற்றும் கல்கடவல ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் விசேட உணவுப் பரிசோதனை நடைபெற்றது.
இதன்போது, காலாவதியான உணவுப் பொருட்களும் புழுக்கள் காணப்பட்ட உணவுப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
வழக்குத் தாக்கல்
இதனையடுத்து, கோமரங்கடவல பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இந்திக சம்பத், ஒன்பது வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக மொரவெவ நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

குறித்த வழக்குகள் விசாரணைக்கு இன்று (19.11.2026) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒன்பது கடை உரிமையாளர்களும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.
இதன்போது, ஒவ்வொரு கடை உரிமையாளருக்கும் தலா 10,000 ரூபாய் வீதம் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.