ஜனாதிபதியுடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் விசேட கலந்துரையாடல்
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.
நேற்று(18.11.2026) இடம்பெற்ற இந்தச் சந்திப்பு தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்து, அமெரிக்கா - இலங்கை இடையிலான ஒத்துழைப்பின் எதிர்காலம் மற்றும் இரு தரப்புக்கும் பொதுவான முன்னுரிமைகள் குறித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
புதிய வாய்ப்பு
எங்களது வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, நாடுகடந்த குற்றச்செயல்களை எதிர்கொள்வதில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கூட்டு முயற்சிகள் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் நம்பகமான அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விரிவாகக் கலந்துரையாடினோம்.

எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொருளாதாரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்கவும், மேலும் சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கர்களுக்கும் இலங்கையர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும், இதுவரை அடைந்துள்ள இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதியுடன் உள்ளோம் என்றுள்ளது.