காணிகளை அபகரித்துக் கொண்டு உணவுப் பஞ்சத்தை தீர்க்க முடியாது: சிவசக்தி ஆனந்தன்
விவசாயிகளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து அவர்களின் காணிகளை அபகரித்துக் கொண்டு இந்த நாட்டில் உணவுப் பஞ்சத்தை தீர்க்க முடியாது. இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கட்சி பேதமின்றி கொண்டு செல்ல வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டனியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவட்ட விவசாயிகளுடன் இடம்பெற்ற திறந்த கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் காணிப்பிரச்சனைகள் தொடர்பில் நாடாளுமன்றம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பேசியும் எந்த தீர்வும் இல்லை.
அதனால் நாங்கள் இது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. கட்சி விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அனைவரதும் பொறுப்பு.
ஏனைய மாவட்டங்களில் பல கட்சிகள் இருந்தாலும், அவர்கள் தமக்கான நிகழ்ச்சி நிரலை கொண்டிருந்தாலும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள். தமிழ் மக்கள் தொடர்பில் ஐ.நா மனிதவுரிமை பிரேரணை உள்ளிட்ட எந்த விடயத்திலும் அவர்கள் ஒற்றுமையாக செயற்படுகிறார்கள்.
ஆகவே வன்னி மாவட்ட மக்களின் ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்டவர்கள் இந்த மாவட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது.
ஜனாதிபதி அவர்களிடம் விவசாயப் பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும். சில பிரச்சனைகளை ஜனாதிபதி அவர்களால் தான் தீர்க்க முடியும். ஏனெனில் நில அபகரிப்பு தொடர்பாக சில திணைக்களங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதில் இருந்து அவர்களை கட்டுப்படுத்த முடியாது.
நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி என்ற அடிப்படையில் அவரிடம் முன்னிலைப்படுத்தி கொடுக்க முடியும். குறிப்பிட்ட காலப்பகுதியில் அதனை தீர்க்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
விவசாயிகளுக்கு நெருக்கடிகளைக் கொடுத்து அவர்களின் காணிகளை அபகரித்துக் கொண்டு இந்த நாட்டில் உணவுப் பஞ்சத்தை தீர்க்க முடியாது. இந்த விடயத்தில் கட்சி பேதமின்றி ஜனாதிபதியுடன் பேசி தீர்வு காண வேண்டும்.
ஒரு காலவரையறைக்குள் தீர்க்க முடியாவிட்டால், மக்களுடன் இணைந்து போராட வேண்டும். அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை தெரிவு செய்வது தமிழ், முஸ்லிம் மக்களின் கைகளிலேயே உள்ளது.
தென்னிலங்கை கட்சிகள் பிளவுபட்டுள்ளது. எமது விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்காது விடின் விவசாயிகளிடம் இருந்து பாடத்தை பெற வேண்டி வரும். நாமும் விவசாயிகளுடன் இணைந்து போராட வேண்டும். எங்களுடைய பிரச்சனைகளை பேரம் பேசாத வரை நாம் தொடந்தும் அடக்குமுறைக்குள் தான் இருக்க முடியும். எனவே எமது கோரிக்கையை குறித்த காலத்திற்குள் தீர்க்க முடியா விட்டால் வீதியில் இறங்க வேண்டி வரும் எனத் தெரிவித்தார்.