மலையக பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை! சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
மலையக பகுதிகளில் நேற்று(16) இரவு முதல் பெய்யும் கனமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதிகளில் மற்றும் ஏனைய சிறிய வீதிகளிலும் அடர்ந்த பனிமூட்டம் நிலவுகிறது.
அறிவுறுத்தல்
ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு, இந்த வீதிகளில் வாகனங்களை செலுத்தும்போது, வாகன ஹெட்லைட்களை ஒளிரச் செய்து மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இலங்கையின் சில பகுதிகளில் இன்று 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யும்.
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு தீவின் பிற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இதேவேளை காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மாலை அல்லது இரவில் மற்ற கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும், காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீட்டராக இருக்கும். மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-55 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
சிலாபத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோர கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
சிலாபத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலதிக தகவல் - அமல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri