புத்தளம் மாவட்டத்தில் 27 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிப்பு
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் மோசமான காலநிலை காரணமாக 7 ஆயிரத்து 206 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 222 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட செயலாளர் இந்திக சில்வா தெரிவித்துள்ளார்.
புத்தளம், வனாத்தவில்லு மற்றும் ஆனமடுவ ஆகிய மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
புத்தளத்தின் முக்கிய அரச நிறுவனங்கள்
புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு பாதுகாப்பு மையங்களில் தற்போது 16 குடும்பங்களைச் சேர்ந்த 52 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

விசுத்தாராம விகாரையில் 47 பேரும், புத்தளம் தெற்கு இந்து கோயிலில் 5 பேரும் தங்கியுள்ளனர். இவர்களுக்குத் தேவையான சமைத்த உணவுகளை வழங்கும் பணிகளை அனர்த்த நிவாரண சேவை அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தளத்தின் முக்கிய அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
புத்தளம் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் பொலிஸ் நிலையம், பிரதேச செயலாளர் அலுவலகம் மற்றும் காலநிலை ஆய்வு அலுவலகம், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் என்பவையே வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புத்தளம் இந்துக் கல்லூரி, பாத்திமா மகளிர் கல்லூரி, சாஹிரா தேசிய கல்லூரி, சென்ட் அன்ரூஸ் மத்திய கல்லூரி மற்றும் ஆனந்த கல்லூரி ஆகிய பாடசாலைகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளநீர் காரணமாகப் பிரதான போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் தொடருந்து பாதை, புத்தளம் - அனுராதபுரம் வீதி, புத்தளம் - குருணாகல் வீதி மற்றும் புத்தளம் - சிலாபம் வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்தப் போக்குவரத்துப் பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan