புதுக்குடியிருப்பு வீதியின் குறுக்கறுத்து பாய்ந்த வெள்ள நீர்: மக்கள் அவதானமாக செயல்படுமாறு கோரிக்கை (Photos)
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாபிலவு ஊடாக வற்றாப்பளை செல்லும் வீதியில் இரு இடங்களில் மழை வெள்ளம் வழிந்தோடுவதால் வீதியால் மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முத்தையன் கட்டு குளத்தின் நீர் பேராறு ஊடாக கள்ளியடி பகுதியில் இருவேறு இடங்களில் பாலத்தின் மோலால் பாய்கின்றது.
இந்த இடங்களில் உந்துருளியில் கூட பயணிக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வான்கதவுகள்
கள்ளியடி பாலத்திற்கு அருகில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்று முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கள்ளியடி வயல்வெளிபகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கள்ளியடி பாலங்கள் ஊடக மழை வெள்ளம் நந்திக்கடலினை சென்றடைகின்றது.
முத்தையன் கட்டு குளத்திற்கான நீர்வரத்து மேலும் அதிகரித்தால் வான்கதவுகள் மேலும் திறக்கப்படலாம். அதனால் இந்த வீதி ஊடாக பயணிப்பவர்கள் அவதான செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் முத்தையன்கட்டு குளத்திற்கான நீர்வரத்து அதிகமாக காணப்படுவதுடன் முத்தையன் கட்டுகுளம் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றது குளத்தில் இருந்து வெளியேற்றும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று (18.12.2023) மாலை வரை முத்தையன் கட்டு குளத்திற்கு 26 ஆடி தண்ணீர் வரத்து காணப்பட்டுள்ளது.
முத்தையன் கட்டு குளத்தின் வான்கதவுககள் நான்கும் திறந்து விடப்பட்டுள்ளதால் பேராற்றினை அண்டிய மக்கள் வெள்ள அனர்த்தத்தினை எதிர்கொண்டுள்ளார்கள்.
மக்கள் பெரும் சிரமம்
முத்தையன் கட்டு வான் நீர் வழிந்தோடும் பேராற்றுப்பகுதியில் அதாவது ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் பேராறு,கெருடமடு போன்ற இடங்களில் மூன்று இடங்களில் வீதியினை மூடி வெள்ளநீர் வடிந்தோடி வருவதை அவதானிக்க முடிந்துள்ளது. இதனால் வீதியால் பயணிப்பதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
வெள்ளத்தில் மூழ்கியுள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் பிரதேச செயலக அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
மழைவெள்ளத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
நெற்பயிர்கள் எல்லாம் குடலை பருவத்தினை அடைந்துள்ள நிலையில் மழை வெள்ளம் வயல் நிலைத்தினை மூடி பாய்கின்றது இதனால் நெற்செய்கை அழிவடையும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
அனர்த்த முகாமைத்துவ தகவல்கள்
இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1289 குடும்பங்களை சேர்ந்த 4217 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 279 குடும்பங்களை சேர்ந்த 884 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது மிக கனதியாக குறுகிய நேரத்தில் கிடைப்பதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகள் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன் இந்நீர் வழிந்து ஓட முடியாத நிலைமையையும் காணப்படுகின்றது.
அத்தோடு அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொள்கின்றது.
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழைகாரணமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள விசுவமடுகுளம், உடையார்கட்டுகுளம், மருந்தங்குளம் உள்ளிட்ட குளங்கள் வான்பாய்கின்றன இதனை விட காட்டாற்று வெள்ளத்தின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் வெள்ள நீர் வீதியினை மூடிபாய்ந்துள்ளது.
இதனால் வீதியால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
விசுவமடுகுளம் மற்றும் காட்டாற்று வெள்ளத்தினால் மாணிக்கபுரம் பிள்ளையார் கோவிலடிபகுதியில் வீதியினை மேவி மழைவெள்ளம் பாய்ந்தேடிவருகின்றது உடையார் கட்டுகுளம் வான்பாய்வதால் மூங்கிலாற்று வீதியில் மழைவெள்ளம் வழிந்தோடிவருகின்றது.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்
மருதங்குளம் வான்பாய்வதால் மஞ்சல் பாலத்தினை மேலி வீதியால் நீர் வடிந்தோடி வருகின்றது. இந்த மூன்று இடங்களிலும் (புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில்) வெள்ளநீர் வடிந்தோடுவதால் மக்களின் போக்குவரத்துக்காக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நின்று போக்குவரத்தினை இலகுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
வெள்ளநீரினை பார்வையிடுவதற்காவும் மக்கள் வீடுகளில் இருந்து வீதிக்கு வந்து பார்வையிட்டு வருவதை அவதானிக்க முடிந்துள்ளது.












