வற்றாப்பளை - முள்ளியவளை வீதியில் வெள்ளத்தால் சிதைந்த பகுதி: நடக்கப் போவது என்ன..!
வற்றாப்பளையில் இருந்து முள்ளியவளைக்கு உள்ள பிரதான பாதையில் ஒரு பாலத்தின் அருகிலுள்ள வீதியினை பலமாக தாக்கிய வெள்ளம் அதனை சேதமாக்கியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
சிறிய பாலத்தினூடாக அதிகளவு நீர் செல்ல முடியாததால் பாலத்தை மீறிய வெள்ளம் பாதையை மேவி பாய்ந்துள்ளது.
வெள்ளத்தின் வேகத்தால் ஏற்பட்ட அழுத்தம் வீதியினை சேதமாக்கி வீதியில் பயணிப்போரை ஒதுங்கி விலகி பயணிக்கும்படி செய்துவிட்டது.
பாலத்தின் தன்மை
வற்றாப்பளையில் இருந்து முள்ளியவளைக்கு பயணிக்கும் போது முள்ளியவளை எல்லையில் அமைந்துள்ள பாலம் இது. சிறிய பாலமாக இருக்கின்றது.
ஆறு குழாய்ப் பாலத்தினை ஒன்றிணைத்ததாக அது இருக்கின்றது. அந்த பாலத்தின் மீதான வீதி கொங்கிறீற்று இடப்பட்டுள்ளது.
இந்த முறை பொழிந்த அளவுக்குமீறிய வெள்ளத்தின் ஓட்டத்தை தாங்கிக்கொள்ள முடியாத பாலமாக இது இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என சமூக ஆர்வலர் தங்கள் அவதானங்களின் அடிப்படையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நீண்ட காலமாக இந்த பாலம் அமைப்பதில் அக்கறையின்மை இருப்பதாகவும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இப்போது இந்த பாலம் ஆறு சிறு சீமெந்து குழாய்களை கொண்டு இணைந்த பாலத்தொகுதியாக அமைந்துள்ளது.
இதனை ஏன் ஏனைய பிரதான வீதிகளில் உள்ளது போல் பெரிய பாலம் ஒன்று அமைக்கப்படவில்லை என அவர்கள் தங்கள் வாதத்திற்கு அரண் சேர்க்கும் வண்ணம் மேலும் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
மேவிய வெள்ளம்
பாலதிற்கு அருகில் அதிலிருந்து சிறிது தூரத்தில் மற்றொரு சிறிய மதகு ஒன்றும் இருப்பதனை சுட்டிக்காட்டலாம்.
இம்முறை பாலம் மேவிய வெள்ளம் அந்த சிறிய மதகு வரை பாய்ந்துள்ளதனையும் அதன் போது பாதையின் கொங்கிறீற்று பகுதியில் பாரியளவிலான சிதைவுகள் ஏற்பட்டுள்ளதையும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர் என்பதும் நோக்கத்தக்கது.
கொங்கிறீற்று வீதியில் ஏற்பட்ட சேதம்பாலத்துடன் வற்றாப்பளை பக்கமாக இணைந்துள்ள கொங்கிறீற்று வீதியின் பத்து மீற்றர் நீளத்திற்கும் கூடிய பகுதியில் நீரோட்டத் திசையில் உள்ள பகுதி சிதைந்துள்ளதை அவதானிக்கலாம்.
வீதியின் விளிம்புப் பகுதியில் சீமெந்து கட்டுமானம் உடைக்கப்பட்டு உள்ளது. வீதியின் மேல் தளத்தில் உள்ள பகுதி சேதமில்லாதுள்ள போதும் அதற்கு கீழ் தாங்கு மண் இல்லையென்பதால் அதன் மீது பயணித்தல் ஆபத்தானது என பொறியியல் துறைசார் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
பெரிய வாகனங்களோ அல்லது பொருட்களை ஏற்றி பரிமாற்றும் பாரவூர்திகளோ இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இது விரைவாக திருத்தியமைக்கப்படாது என்ற எண்ணம் மக்களிடையே இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாலம் புனரமைப்பு
திருத்தியமைக்கும் போது பாலத்தினை அகலமாகவும் பெரியதாகவும் அமைக்கும் போது எதிர்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த வீதியில் பயனிப்போருக்கு எச்சரிக்கை செய்வதற்காக பயனிக்க முடியாத பகுதிக்குள் செல்லாதிருக்க கற்களை கொண்டு சுட்டிக் காட்டியிருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மூன்றாம் கட்டை பாலம் தண்ணீருக்குள் கட்டப்பட்டுள்ளது. சங்குப்பிட்டிப் பாலம் கடலுக்குள் கட்டப்பட்டுள்ளது. அவையெல்லாம் சிதையவில்லை. ஆனாலும் இப்படி கிராமிய வீதிகளில் உள்ள பாலங்கள் மட்டும் ஏன் வெள்ளத்தினை தாங்கும் நிலையை இழந்து நிற்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொறுப்புணராத செயற்பாடு மக்களுக்கான குடிநீர்த் தொகுதிகளை ஒழுங்கமைக்கும் போது நீர் கொண்டு செல்லும் குழாய்களை பாலங்களின் ஊடாக கொண்டு செல்லும் போது பேணப்படும் முறைகளை துறை சார்ந்தோர் கருத்திலெடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வற்றாப்பளை பாலத்தின் நீர் உள் நுழையும் பக்கத்திலும் நீர் வெளியேறும் பக்கத்திலும் இரு நீர்க் குழாய்கள் இருப்பதனை அவதானிக்க முடியும். வெளியேறும் பக்கத்தில் இரும்புக்குழாய் உயரமாக பொருத்தப்பட்டுள்ளது.
நீர் உள் நுழையும் மற்றைய பக்கத்தில் நீலநிற பிளாஸ்டிக் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்த குழாய் நீர் செல்லும் பாலத்தின் வழிகளை மறித்த வண்ணம் இருப்பதானது அதனூடாக பாயும் நீரின் அளவை குறைத்து நீரானது பாதையை மேவி பாய ஏதுவாக இது அமைந்துவிட்டது என சுட்டிக்காட்டப்படுகின்றது.
புதிதாக ஒரு பாலமும் வேண்டும்
பலமுறை இந்த பாலம் உள்ள பாதையின் பகுதிகள் சேதமடைவதாக தன் நினைவுகளை வற்றாப்பளை வாசியொருவர் பகிர்ந்து கொண்டார். சிறிய பாலமாக இருப்பதால் இந்த சிக்கல் தோன்றுவது தவிர்க்க முடியாது போகின்றது.
ஆறு குழாய் பாலமாக இருப்பதால் அதனூடாக பாயும் நீரின் அளவு குறைவாக இருக்கின்றது. இதுவே பெரிய பாலமாக இருந்தால் பாலத்தை மீறிய பாதையை மேவிய நீரோட்ட சூழல் தோன்றாது.
சிதைந்த பாதையினை புனரமைக்கும் போது புதிதாக ஒரு பாலத்தை அமைக்க முயல்வதே பொருத்தமானதாக இருக்கும் என கருத்துரைக்கப்பட்டதனை இங்கே குறிப்பிடலாம்.
நாளடைவில் இந்த பாதையினூடாக பயணிப்பதில் அதிக அளவில் இடையூறுகளை மக்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என மக்களிடையே கருத்துக்கள் இருப்பதையும் குறிப்பிடுதல் வேண்டும்.








