மக்களே அவதானம்! 31 பிரதேச செயலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 3 தொடக்கம் 48 மணிநேரங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடுமென நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் நீர்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு அபாயம்
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக, சிறியளவில் வெள்ளம், மண்சரிவு மற்றும் கனமழைக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் துறை, பேரிடர் முகாமைத்துவ மையம் மற்றும் வானிலைத் திணைக்களம் ஆகியவற்றால் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பகுதிகளில் கணிசமான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக 48 மணி நேரத்திற்குள் ஆற்றுப் பள்ளத்தாக்கு தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளம் ஏற்படலாம்.
களனி ஆறு - தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, வத்தளை. களு கங்கை பள்ளத்தாக்கு - பாலிந்த நுவர, புலத்சிங்கள. அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகள் - திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான, வத்தளை.
எனவே இது தொடர்பில் குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்களும், அந்த வழியாகச் செல்லும் வாகன சாரதிகளும் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், தற்போது நிலவும் அதிக மழையுடனான சூழ்நிலை காரணமாக கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது.
தீவை அண்மித்த பகுதிகளில் குறைந்த அளவிலான வளிமண்டல குழப்பம் இன்னும் நீடிக்கிறது. எனவே, தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் 31 பிரதேச செயலகங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை
நாளை (15) முற்பகல் 10.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 3ஆம் நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, தொடங்கொட, மத்துகம, மில்லனிய, பண்டாரகம மற்றும் ஹொரண பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கும் கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவவிற்கும் 2 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக மற்றும் பாதுக்க, காலி மாவட்டத்தில் பத்தேகம, களுத்துறை மாவட்டத்தில் மதுராவல, பேருவளை, பாணந்துறை மற்றும் களுத்துறை ஆகிய இடங்களுக்கு நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, தெரணியகல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் எலபாத, பெல்மதுல்ல, குருவிட்ட, நிவித்திகல, எஹலியகொட, கலவான, அயகம, கிரியெல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களிலும் நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழையை எதிர்பார்க்கலாம்.
தற்காலிகமாக வீசும் பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி-சிவா மயூரி