பெலியத்த துப்பாக்கிக்சூடு விவகாரம்: பின்னணி தொடர்பில் பொலிஸார் விளக்கம்
பெலியத்தயில் அபே ஜனபல கட்சியின் தலைவர் உள்ளிட்ட ஐவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகள் ஊடாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிக்சூடு நடத்தியவர்கள் தென் மாகாணத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெலியத்த அதிவேக நுழைவாயிலுக்கு அருகில், துப்பாக்கிச்சூடு நடத்தி ஐவரை கொலை செய்த சந்தேகநபர்கள் தப்பிச்சென்ற காட்சிகள் அருகிலிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவாகியிருந்தன.
குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணை
இதன்படி மாத்தறை - கம்புருபிட்டியவில் வாகனத்தில் இருந்து ஒருவர் இறங்கும் சிசிரிவி காட்சிகளும் விசாரணைக் குழுக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இந்த காணொளிகளை தொலைபேசி பகுப்பாய்விற்கு உட்படுத்தி, அதன் அடிப்படையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய பெலியத்த அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் நேற்று முன்தினம் (22.01.2024) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் உயிரிழந்தனர்.
ஜீப் வாகனத்தில் வந்த சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர், வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லும் போது, பின்னால் மற்றுமொரு ஜீப் வண்டியில் வந்த சிலர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஜீப்பில் வந்தவர்கள் இரண்டு T - 56 துப்பாக்கிகளுடன் ஹோட்டலுக்குள் நுழைந்து தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவை துரத்திச்சென்ற துப்பாக்கிதாரிகள், வெளியேறுவதற்கு எவ்வித வழியும் இல்லாத ஓர் இடத்தில் வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
[KKQDQAI ]
பிரேதப் பரிசோதனை
இதற்கமைய துப்பாக்கிச்சூட்டில் நால்வர் சம்பவ இடத்திலும், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
இதன்படி பெந்தொட்ட பகுதியை சேர்ந்த சுரத்தலா என்றழைக்கப்படும் இளையகுட்டிகே சமீர மதுஷங்க, இந்துருவ பகுதியை சேர்ந்த குமார விதாரனலாகே ஹசித்த சஞ்சு, குருணாகலையை சேர்ந்த பையா துரயாலகே புத்திக்க ராஜபக்ச, தெமட்டகொடையை சேர்ந்த கோராலலாகே நளின் சம்பிக்க ஜயதிலக்க ஆகியோரும் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் தங்காலை வைத்தியசாலையில் நேற்று காலை இடம்பெற்றன.
இதன்படி முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவிருந்தன.
அபே ஜனபல கட்சியின் தலைவராக செயற்பட்ட சமன் பெரேரா 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.
உயிரிழந்த சுரதலா எனும் சமீர மதுஷங்கவும் கடந்த பொதுத் தேர்தலில் அபே ஜனபல கட்சியில் இருந்து காலியில் போட்டியிட்டார்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பிலான பல விடயங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
2022 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி மூன்று நண்பர்களுடன் கெப் ஒன்றில் பயணித்த அசுன் சாமர என்பவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐவரை தங்காலை பொலிஸார் கைது செய்தனர்.
இதன்படி துப்பாக்கிச் சூட்டில் நேற்று உயிரிழந்த பெந்தோட்டையை சேர்ந்த சுரதலா எனப்படும் இளையகுட்டிகே சமீர மதுஷங்க கைதானவர்களில் ஒருவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக தங்காலை சென்று கொண்டிருந்த போதே சமன் பெரேரா உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர்.
கடந்த வருடம் ஜூன் 5 ஆம் திகதி இடம்பெற்ற குடாவெல்லே அசேல சம்பத் என்பவரின் கொலைச் சம்பவம் தொடர்பிலான வழக்குடன் தொடர்புடைய இருவரும் கொலை செய்யப்படடுள்ளனர்.
வேதினிகம விமலதிஸ்ஸ தேரர்
அபே ஜனபல கட்சி கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டதன் பின்னர் ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக்கொண்டதுடன், அதற்கு ஒருவரை நியமிப்பது தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்சியின் செயலாளராக செயற்பட்ட வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் சில நாட்கள் காணாமல் போயிருந்ததுடன், தன்னை கடத்திச் சென்றிருந்ததாக அவர் பின்னர் கூறியிருந்தார்.
எனினும், இறுதியில் அந்த நாடாளுமன்ற ஆசனத்திற்கு அத்துரலியே ரத்தன தேரர் நியமிக்கப்பட்டார்.
இந்த கொலையின் பின்னணியில் அரசியல் தொடர்பு இருப்பதாக இதுவரை உறுதியாகவில்லையெனவும் தெற்கின் இரண்டு பாதாள உலகக் கோஷ்டிகளுக்கிடையிலான பிரச்சினையின் விளைவாகவே இது இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |