யாழ். நெடுந்தீவு ஐவர் கொலை விவகாரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான புதிய தகவல்
யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் புங்குடுதீவில் சந்தேகநபரை கைது செய்ததை அடுத்து கொலைச் சம்பவம் தொடர்பான பல தகவல்களை கண்டறிந்துள்ளனர்.
சந்தேகநபரான 51 வயதான நபர் 25 வருடங்களாக ஜெர்மனியில் வசித்து வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு நாடு திரும்பிய நிலையில், அவரது குடும்பத்தினர் தற்போதும் ஜெர்மனியில் வசித்து வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகபர் ஜெர்மனியில் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளாரா என்பதினை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் பாவனை
அத்துடன், அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த நிலையில், மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கடந்த 19 ஆம் திகதி நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், நெடுந்தீவை வசிப்பிடமாகக் கொண்ட 74 வயதான கார்த்திகேசு நாகசுந்தரி என்பவர் தனது வீட்டின் அறையொன்றை சந்தேகநபருக்கு வாடகைக்கு வழங்கியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது குறித்த நபர் வீட்டில் தங்கியிருந்த போது வீட்டு உரிமையாளரின் உறவினர்கள் நால்வர் குறித்த வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் முல்லைத்தீவில் இருந்து தம்பதியொன்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பெண்களும் அடங்கியுள்ளனர்.
இதனை நன்கு அவதானித்த சந்தேகநபர் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் நால்வரையும் கூரிய ஆயுதங்களினால் தாக்கி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு புங்குடுதீவில் உள்ள தனது வீட்டிற்கு தப்பிச்சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற போது வீட்டிலிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அயல் வீட்டிலிருந்து சென்ற 75 வயதான சுப்ரமணியம் மகாதேவா என்பவரும் சந்தேகநபரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வீட்டிலிருந்த ஐவரில் 101 வயதான கனகரத்தினம் பூரணம் என்பவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பியிருந்ததாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு கூறியுள்ளது.
இந்த நிலையில், சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய 74 முதல் 83 வயதுகளையுடைய 5 பேரையும், தாமே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த கொலைகளை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
