யாழ். நெடுந்தீவில் கொலையுண்டவர்களில் இருவரது சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு
நெடுந்தீவில் நேற்றைய தினம் (ஏப்ரல் 22) கொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் கண்மணியம்மா பூமணி ஆகியோரது சடலங்கள் இன்றைய தினம் (ஏப்ரல் 23) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவர்களது சடலங்கள் இன்று இரவு கொக்குவில் பகுதியிலுள்ள பிரம்படி ஒழுங்கையிலுள்ள உறவினர் ஒருவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன.
பொலிஸாருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
நெடுந்தீவில் நேற்று ஐவர் படுகொலை செய்ப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வீட்டில் கடந்த இரு தினங்கள் தங்கியிருந்த 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் என உடமைகள் சில மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முற்படுத்திய பொலிஸார் 48 மணித்தியாலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி கோரியுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட மன்று, 48 மணிநேர விசாரணையின் பின்னர் மன்றில் மீண்டும் சந்தேகநபரை முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, ஊர்காவற்றுறை பொலிஸாரின் அசமந்தத்தினால் சந்தேகநபரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார்.
எனினும் புங்குடுதீவு இளைஞர்களின் முயற்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட
குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவான தமிழ் பொலிஸ் குழுவின் துரித முயற்சியினால்
கொலைச் சம்பவம் நடைபெற்று 24 மணிநேரத்துக்குள் கொலையாளியை கைது செய்ய
முற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

