கொழும்புக்கு மட்டும் ஐந்து புதிய நீதிமன்றங்கள்! அரசாங்கத்தின் திட்டம்
சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியைக் குறைக்கும் வகையில் இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் பிரதிபலனை ஆறு மாதங்களின் பின்னர் காணக்கூடியதாக இருக்கும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மத்தியஸ்த சபை சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இச் சபையின் செயற்பாடுகள் காரணமாக இரண்டு இலட்சம் வழக்குகள் நீதிமன்றம் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
புதிய நீதிமன்றங்கள்..
நாடெங்கிலுமுள்ள நீதிமன்றங்களில் 11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் வளர்ந்த நாடுகளில் பத்து இலட்சம் பேருக்கு 40 முதல் 60 நீதிபதிகள் கடமையில் இருக்கும் அதேசமயம் இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு இருபது நீதிபதிகளே கடமையில் இருக்கின்றனர்.

நீதிமன்றத்தில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது ஜனவரியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளின் அடுத்த தவணை ஜூன் மற்றும் ஜூலை வரை தள்ளிவைக்கப்படுகிறது.
எனவே கொழும்புக்கு மட்டும் ஐந்து புதிய நீதிமன்றங்களை உருவாக்கியுள்ளோம். மேலும் கொழும்புக்கு வெளியே புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. புதிதாக 11 நீதிமன்றங்கள் உருவாக்கப்படவுள்ளன.
மத்தியஸ்தசபை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் போது சில குற்றங்களின் கீழ் தண்டனை பெற்றவர்கள் தண்டனை காலத்தின் இறுதி ஆறுமாத காலத்தில் வெளியே வந்து மத்தியஸ்த சபையிடம் முறையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.