வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் சொத்து பரிமாற்றம்! முறைசாரா பணப்பரிவர்த்தனை தொடர்பில் சபையில் விளக்கம்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், சட்ட அடிப்படையில் ஈட்டிய உள்நாட்டுச் சொத்துக்களைப் பரிமாற்றம் செய்ய முயலும் பொழுது, சிக்கலான நிர்வாகக் கொள்கைகள், தன்னிச்சையான முடக்கம் மற்றும் அடிக்கடி மாறும் விதிகளை எதிர்கொள்வதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
இது இலங்கையிலுள்ள வங்கி அமைப்பின் மீதான அவர்களது நம்பிக்கையைச் சிதைத்து, முறைசாராப் பணப்பரிமாற்ற வலைப் பின்னல்களைப் பயன்படுத்தத் தூண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (06.10.2026) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
முதலீடுகளுக்கான பங்கு வருவாய்
மேலும் தெரிவிக்கையில், 2026ஆம் ஆண்டின் 1ஆம் எண் கொண்ட ஒழுங்குவிதியானது இலங்கையில் வசிப்போர் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கான பங்கு வருவாய் மற்றும் மூலதன வருவாய் என்பவற்றை ஈட்டிய 180 நாட்களுக்குள் இலங்கை வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்குத் திரும்ப அனுப்பப்பட வேண்டும் எனக் கட்டுப்படுத்துகின்றது.

இதன்மூலம், வெளிச்செல்லும் மூலதனப் பாய்ச்சல் இலங்கையின் உள்நாட்டு வங்கி முறைக்கு ஆதரவளிப்பதையும் தேசிய இருப்புக்களை வலுப்படுத்துவதையும் உறுதி செய்கின்றது.
2026ஆம் ஆண்டின் 2ஆம் எண் கொண்ட ஒழுங்குவிதியானது; வெளிநாடுகளில் வாழும் இலங்கையரது வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்களைக் கையாள்கின்றது.
முறைசாரா பணப்பரிமாற்றம்
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர், சட்ட அடிப்படையில் ஈட்டிய உள்நாட்டுச் சொத்துக்களைப் பரிமாற்றம் செய்ய முயலும் பொழுது, சிக்கலான நிருவாகக் கொள்கைகள், தன்னிச்சையான முடக்கம் மற்றும் அடிக்கடி மாறும் விதிகளை எதிர்கொண்டனர்.
இது; இலங்கை வங்கி அமைப்பின் மீதான அவர்களது நம்பிக்கையைச் சிதைத்து, முறைசாராப் பணப்பரிமாற்ற வலைப்பின்னல்களைப் பயன்படுத்தத் தூண்டியது.

2026ஆம் ஆண்டின் 2 ஆம் எண் கொண்ட ஒழுங்குவிதியானது, நியாயமான, வெளிப்படையான மற்றும் விதிகள் சார்ந்த ஓர் அமைப்பை உருவாக்குகிறது.
இந்த அமைப்பானது; திடீர் பணப்புழக்க அதிர்ச்சிகளிலிருந்து இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்புகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையரது சட்ட அடிப்படையிலான உரிமைகளையும் மதிக்கிறது என தெரிவித்துள்ளார்.