மகிந்த முன்னிலையில் ஷிரந்தி கைது - அம்பலமானது நாடகம்
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டு விசாரணைக்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கிருலப்பனையில் அமைந்துள்ள அவரது வதிவிடத்தில் வைத்து இன்று காலை ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக இரண்டு தடவைகள் பதவி வகித்த மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் முதற்பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிந்த முன்னிலையில் கைது
சிரிலிய சவிய கணக்குத் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணை ஒன்றுக்கு அமையவே ஷிரந்தி ராஜபக்ச இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கைது செய்யப்பட்டு அழைத்து செல்லும் போது கண்ணில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டமைக்கு சான்றாக அதனை மறைக்கும் வகையில் பிளாஸ்டர் ஒட்டியிருந்தமை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொள்ள செல்வதாக கூறி, ஷிரந்தி ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்நிலையில் ஊழல் மோசடி விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் அவசரமாக சிங்கப்பூர் சென்றிருந்தாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஷிரந்தியின் நாடகம்
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் ஷிரந்தி ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்தார்.

கண்களில் சத்திரசிகிச்சை மேற்கொண்டதற்கான எந்தவொரு சான்றுகளும் அற்று சாதாரண நிலையிலேயே அவர் இலங்கையை வந்தடைந்தார். இதன்போது கண்ணில் எந்தவொரு அடையாளமோ, கட்டுக்களோ இருக்கவில்லை.
எனினும் இன்றையதினம் கண்ணில் கட்டுக்களுடன் ஷிரந்தி ராஜபக்சவை, லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் ஷிரந்தியின் அரசியல் நாடகம் அம்பலமாகி உள்ளதுடன், பொய்யான முறையில் சிங்கப்பூர் சென்றிருந்தார் என்பது உறுதியாகி உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை ஷிரந்தி ராஜபக்ச அழைத்து செல்லப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்சவும் மனைவிக்காக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.