இந்திய கடற்தொழிலாளர்களை தாக்கிய இலங்கை கடற்படையினரால் பரபரப்பு(Video)
இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்குள்ளான நிலையில் காரைக்கால், மேடு பகுதியைச் சேர்ந்த ஐந்து கடற்தொழிலாளர்கள் இன்று(5) காரைக்கால் கடற்ரையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காரைக்கால், மேடு பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதன்போது ஐந்து கடற்தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதோடு, ஒருவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரின் தாக்கல்
காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை(2) அவரது விசைப்படகில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 15 பேருடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கு இந்திய எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராஜ்குமார் மற்றும் அவரது படகையும் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதன்போது விசைப்படகில் இருந்த திசை காட்டும் கருவி, வாக்கி டாக்கி ,ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளனர்.
படகில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் ராஜ்குமார் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்த நிலையில் இன்று கரையை அடைந்துள்ளனர்.
கடற்தொழிலாளர்களிடையியே பதற்ற நிலை
மேலும் இவர்களில் படகின் உரிமையாளர் ராஜ்குமார் பலத்த காயமடைந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தஞ்சை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் உறவினர்கள் காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களிடம் முறைப்பாடுகள் செய்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் இடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



