வெள்ளத்தினால் சிரமங்களை சந்தித்துள்ள கடற்றொழிலாளர்கள்
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கடலை அண்டிய தோணாக்கள் தோண்டிய பகுதிகளில் ஆற்றுவாழைகள் எனப்படும் ஒரு வகையான தாவரங்கள் நிரம்பி காணப்படுவதனால் கடற்றொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக திறந்துவிடப்பட்ட குளங்கள் மற்றும் ஆறுகளில் இருந்து இவ்வாறான தாவரங்கள் கடலுடன் சங்கமித்திருப்பதாக கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கடற்கரையில் கரையொதுங்கிய ஆற்றுவாழை மற்றும் ஆகாய தாமரை போன்ற சல்லு தாவரங்களால் கரைவலை மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடற்றொழிலாளர்கள் சிரமங்கள்
இது தவிர கடற்கரை பகுதியில் இவ்வாறான தாவரங்கள் அதிகமாக காணப்படுவதனால் தொழிலினை மேற்கொள்ள கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதுமாத்திரமன்றி இத்தாவரங்களில் நச்சுப் பாம்புகள் இதர உயிரை கொல்லும் பாம்புகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் குறித்த உரிய அதிகாரிகள் இப்பிரச்சினையில் கவனமின்றி செயற்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கரையோதுங்கி காணப்படுகின்ற இத்தாவரங்களில் ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படுகின்ற பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வருகின்ற ஒரு துர்பாக்கிய நிலையும் காணப்படுகிறது.
மாலை வேளையில் கடற்கரையை நோக்கி தமது ஓய்வு நேரங்களை கழிக்கக்கூடிய சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் வருகின்ற போது இவ்வாறான ஜந்துக்களால் உயிராபத்துக்கள் ஏற்படுகின்ற நிலையும் காணப்படுகிறது.
இதனால் கரையோரப் பாதுகாப்பு மாநகர சபை, பிரதேச செயலகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் இவற்றை கவனத்தில் கொண்டு கரையோர பிரதேசங்களை சுத்தம் செய்து தமது தொழிலை மேற்கொள்ள பாதுகாப்பான ஒரு சூழலை ஏற்படுத்தித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |