டியாகோ கார்சியாவிலிருந்து பிரித்தானியாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள்
இந்தியப் (India) பெருங்கடலின் தொலைதூர தீவான டியாகோ கார்சியாவில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்குண்டிருந்த சுமார் 60 இலங்கை தமிழர்கள், பிரித்தானியாவிற்கு (UK) அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சின் நிதியுதவியுடன் குறித்த இலங்கைத் தமிழர்கள் 6 மாதங்கள் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அரசாங்க நிர்வாகத்தின் கீழ் தீர்க்கப்படாமல் இருந்த இந்த பிரச்சினையை, தற்போதைய அரசாங்கத்தினால், தீர்க்க முடிந்துள்ளது.
முகாம்
முன்னதாக, குறித்த தீவில் இருந்து தமது விடுவிக்குமாறு கோரி, குறித்த இலங்கை தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தனர். அத்துடன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்கும் முயற்சி சம்பவங்களும் பதிவாகியிருந்தன.
இதைத் தொடர்ந்து சிலர் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டனர். முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன.
இந்த தீவு வாழ்க்கை நரகத்தில் வாழ்வது போன்றது என்று குறித்த தமிழர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
சட்ட நிறுவனம்
இந்தநிலையில், குறித்த தமிழர்கள் சிலரைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பிரித்தானியாவின் சட்ட நிறுவனம் ஒன்று, குறித்த தமிழர்கள் பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டமையானது, மனிதாபிமான நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே விவேகமான தீர்வு என்று கூறியுள்ளது.
ஒக்டோபர் 2021இல் குறித்த தமிழர்கள், கனடாவுக்கு செல்லும் வழியில் படகு பழுதடைந்தமையால், அமெரிக்க இராணுவத்தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியால் தஞ்சமடைந்தனர்.
அதேவேளை, டியாகோ கார்சியாவின் ஒரு பகுதியாக இருக்கும் சாகோஸ் தீவுகளின் கட்டுப்பாட்டை மொரிசியஸுக்கு ஒப்படைப்பதாக கடந்த ஒக்டோபரில் பிரித்தானியா அறிவித்த நிலையிலேயே, இலங்கை தமிழர்கள், பிரித்தானியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |