எல்லை தாண்டிய மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள்
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ். மாவட்ட கடற்தொழிலாளர்களின் வலைகள் அழிக்கப்பட்டு வருவதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக பருத்தித்துறை கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக எல்லை தாண்டி இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைமடி படகுகளின் மீன்பிடி அதிகரித்துள்ளது.
அறுத்தழிக்கப்படும் வலைகள்
இதனால் நாளாந்தம் எமது வலைகள் அறுத்தழிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல இலட்சம் ரூபா பெறுமதியான வலைகள் இழுவைப் படகுகளால் அறுத்தழிக்கப்படுவதுடன் வலைகள் காணாமல்போவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் நேற்றிரவும் (28) இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப்படகுகளின் எல்லை தாண்டிய மீன்பிடியால் பருத்தித்துறை பகுதி கடற்றொழிலாளர்களது வலைகள் அழிக்கப்பட்டுள்ளது.
கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்
அத்துடன் உள்ளூரில் சட்டவிரோத மீன்பிடியான சுருக்குவலைத் தொழில் நடவடிக்கையால் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த மீன்பிடி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலையும் தடுத்து நிறுத்த வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




