வங்காள விரிகுடாவில் உருவாகும் புதிய மாற்றம்! கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று(29.10.2026) வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு சுமாத்ரா தீவுகளுக்கு அப்பால் உள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த வளிமண்டல சீர்குலைவு, இன்று(29) காலை சுமார் 11.30 மணியளவில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது என்றும் அறிவிப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கான அறிவிப்பு
இந்தக் குறைந்த காற்றழுத்தப் பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகர்ந்து, அக்டோபர் 31ஆம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அருகிலுள்ள அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு மேல் மேலும் வலுப்பெற்று ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்பின்னர், இந்த அமைப்பு மேலும் வலுப்பெற்று, அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று அந்த ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறும், எதிர்காலத்தில் வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிவிப்புகள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
YOU MAY LIKE THIS