மருத்துவரின் வீட்டின் நுழைவாயில் கதவின் மீது துப்பாக்கி பிரயோகம்:பிரதேச அரசியல்வாதி கைது
மகரகமை பிரதேசத்தில் அமைந்துள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டின் நுழைவாயில் கதவின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தண்ணீர் வழிந்தோட அமைக்கப்பட்டுள்ள கால்வாய் சம்பந்தமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் இந்த நபர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மகரகமை தொகுதியில் போட்டியிட்டு, மேல் மாகாண சபைக்கு தெரிவான முன்னாள் பிரதிநிதி.
மருத்துவர் நிர்மாணித்து வரும் வீடு காரணமாக தண்ணீர் வழிந்தோடும் கால்வாய் தடைப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் முன்னாள் மாகாண சபை உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து தண்ணீர் வழிந்தோட ஏற்பட்டுள்ள தடையை சரி செய்யுமாறு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அங்கு பணியாற்றி வந்த ஊழியர்களிட்ம் கூறியுள்ளார்.
எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால், ஆத்திரமடைந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மேலும் சிலருடன் சில தினங்களுக்கு பின்னர் அங்கு சென்று வேலை செய்து வந்தவர்களை திட்டியுள்ளதுடன் வீட்டின் நுழைவாயில் கதவு மற்றும் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸார் முன்னாள் மாகாண சபை உறுப்பினரை கைது செய்துள்ளனர்.



