கென்யா பாடசாலை விடுதியில் பயங்கர தீ விபத்து: 16 மாணவிகள் பலி - 79 பேர் காயம்
மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் பாடசாலை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நகூரு மாகாணத்தில் உள்ள கில்கில் பகுதியில் அமைந்துள்ள உடுமிஷி பெண்கள் பாடசாலையில் நள்ளிரவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மேலும் 79 மாணவிகள் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் கல்வி அமைச்சர் ஜூலியஸ் ஒகாம்பா இன்று(28.05.2026) தெரிவித்துள்ளார்.
தீ விபத்து
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும், மீட்பு மற்றும் அவசரக்கால உதவிகளைப் காவல்துறையினர் முன்னின்று நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட போது ஏற்பட்ட பயம், அதிர்ச்சி மற்றும் பதற்றம் காரணமாக பல மாணவிகள் இரவோடு இரவாக வெளியே தப்பியோடி இருக்கலாம் என்பதால், பாடசாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 காவல் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி மசூத் முவினி தெரிவித்துள்ளார்.
கென்யாவில் பாடசாலை விடுதிகளில் தீ விபத்து ஏற்படுவது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
நியேரி மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்து
கடந்த 2024-ஆம் ஆண்டில் நியேரி மாகாணத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 மாணவர்கள் உயிரிழந்தனர்.
2017-ஆம் ஆண்டிலும் நைரோபியில் நடந்த ஒரு பாடசாலை தீ விபத்தில் 10 மாணவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கடுமையான ஒழுங்குமுறைகள் மற்றும் மோசமான வசதிகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டங்களின் ஒரு பகுதியாகவே இத்தகைய தீ வைப்புச் சம்பவங்கள் பல நிகழ்த்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது இந்த விபத்து குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.