தமிழர் பகுதியில் பற்றி எரியும் வைத்தியசாலை (video)
திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01.10.2023) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிர் சேதம் இல்லை
வைத்தியசாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும், நிர்வாக பகுதி, ஆய்வு கூடப் பகுதி, மருத்து பொருட்களின் களஞ்சிய சாலை மற்றும் மருந்து விநியோகிக்கும் பகுதி ஆகியன முழுமையாக தீயில் எறிந்து சாம்பலாகி உள்ளன.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
இன்று காலை 5.45 மணியளவில் மருந்து பொருட்களின் களஞ்சிய சாலையில், முதலில் தீப்பற்ற ஆரம்பித்தவுடன், அதில் உள்ள கேஸ் சிலிண்டர்கள் வெடித்து, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத அளவுக்கு பரவ ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து தம்பலாகமம் பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளர் குமார் கருத்து தெரிவிக்கையில்,
இந்த வைத்தியசாலையின் சகல பிரிவுகளும் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இது இந்த பிரதேச மக்களுக்கு பாரிய இழப்பாகும். தீ பரவலுக்கான காரணம் சிலர் மின்னொழுக்கு என்று சொல்கிறார்கள்.
மேலும் சிலர் கேஸ் வெடித்ததால் ஏற்பட்ட தீ என்று சொல்கிறார்கள். உண்மையிலே என்ன நடந்திருக்கின்றது என்பது பற்றி இந்த மக்களுக்கு தெரியாது.
இதன் காரணமாக முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்பட்டு, தீக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று கூறினார்.
மேலும் இந்த தீக்கிரையான சம்பவத்தை நேரில் கண்ட வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
பெறுமதிவாய்ந்த பொருட்கள் இழப்பு
காலை 5:45 மணி அளவில், நான் இரவு கடமையை முடித்துவிட்டு, வைத்தியசாலை முன்றலில் நின்று கொண்டிருந்தபோது, சிலர் கத்திக் கொண்டு ஓடி வந்தார்கள். அந்த நேரம் நானும் சிலரும் வெளியில் வந்து பார்த்தபோது, மருந்து களஞ்சிய சாலையிலிருந்து தீ பரவுவதை அவதானித்தேன்.
அந்த நேரமே களஞ்சிய சாலையினுடைய திறப்பை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, திறந்த போது வேகமாக தீ பரவ ஆரம்பித்த போது, எங்கும் புகைமயமாகவே காட்சியளித்தது. இதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கோடிக்கணக்கான பெருமதியான ஆய்வு கூட பரிசோதனை பகுதி முழுமையாக சாம்பல் ஆக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான மருந்து பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும், புதிய கட்டடத்திற்காக பாதுகாப்பாக வைக்கப்பட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் உட்பட அனைத்து பரிசோதனை கருவிகளும் நாசமாக்கப்பட்டுள்ளன.
தீ அணைக்கும் பிரிவினருக்கு அறிவித்து, சுமார் 30 நிமிடங்களில் அவர்கள் வந்து, தீயை அணைத்தனர். ஆனால் 30 நிமிடங்களில் அனைத்தும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டன என்று தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.