அக்கரைப்பற்றில் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் விரைவான நடவடிக்கையினால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பிரதான வீதி, லங்கா ஸ்ரோருக்கு அருகாமையில் இயங்கி வரும் 'LU LU' நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே அதன் மேல்தளத்தில் இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
இதனைத் தொடர்ந்து, உடனடியாகச் செயற்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீ மேலும் பரவாமல் முழுமையாகக் கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் இத்தீ விபத்தினால் குறித்த கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.

தீ விபத்தின் போது உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கும், அச்சேவையை அக்கரைப்பற்றுக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கும் அங்கு கூடியிருந்த வர்த்தகர்களும் பொதுமக்களும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.



