வைத்தியர் சுகுணன் விவகாரம்! அர்ச்சுனா எம்.பி உள்ளிட்டோரின் வழக்கில் நீதிமன்றத்தின் அறிவிப்பு
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனுக்கு எதிராக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறான பதிவுகளை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உள்ளிட்டோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ், வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கடந்த செப்டெம்பர் 21ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி குறித்த ஆறு பேரும் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக முகநூல் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை (16) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இறுதித் தீர்ப்பு
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உள்ளிட்ட நான்கு பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யா முன்னிலையானார். ஏனைய பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கியாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகியது.
இதனையடுத்து, வழக்கின் இறுதித் தீர்ப்பை எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி அறிவிப்பதற்குத் தீர்மானித்த பதில் நீதவான், வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.