நீதிமன்றத்தில் தனியாக விளக்கமளித்த கஸ்ஸப தேரர்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
புதிய இணைப்பு
திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி புத்தர் சிலை ஒன்றை வைத்தமை உள்ளிட்ட மேலும் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வரும் வழக்கில், கடந்த 11ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு அழைக்கப்பட்டபோது மன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
திருகோணமலை பிரதான நீதவான் ஏ.எஸ்.எஸ். சம்சுதீன் முன்னிலையில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, கஸ்ஸப தேரர் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதன்போது, நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை தொடர்பாக கஸ்ஸப தேரர் தனித்து விளக்கமளித்ததுடன், புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் அதன் நிலைத்தன்மையைப் பேணுவதும் அரசாங்கத்தினதும் பிக்குகளினதும் பொறுப்பாகும் எனவும், தான் அதற்காகச் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த வேளையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகமலிருந்தது பிரபஞ்ச சட்டத்தின்படி நியாயமானது எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நீதிமன்றத்தைத் தவிர்த்துச் செயற்பட்டமை தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரரை நாளை(17) வரை விளக்கமறியலில் வைக்குமாறும், நாளைய தினம் மீண்டும் பலாங்கொடை காஷ்யப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார்.
இவ்விடயத்தில் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் சாட்சியங்களை முன்வைத்திருந்தனர்.
முதலாம் இணைப்பு
பலாங்கொடை கஸ்ஸப தேரர் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட குறித்த பிக்குகள், திருகோணமலை கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவப்பட்டமை தொடர்பான வழக்கில் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டம்
குறித்த வழக்கு கடந்த நவம்பர் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், அநுராதபுர நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் ருவன்வெலிசாயவுக்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்திலும், சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்ட இடத்திலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 12ஆம் திகதி சதாரதன தேரர் உள்ளிட்ட மற்றுமொரு பிக்குகள் குழுவினர் போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.
பொலிஸாரின் கடமை
இந்த மோதலின்போது பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஒருவரைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து, பலாங்கொடை கஸ்ஸப தேரர் தரப்பைச் சேர்ந்த ஐந்து பிக்குகள் மற்றும் மூன்று பொதுமக்கள் என எட்டுப் பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மோதலில் காயமடைந்த சந்தேகநபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களை எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதம நீதவான் சியபத்த சசிந்த விக்கரமரத்ன உத்தரவிட்டார்.
மேலும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த கைது பிடியாணையின் அடிப்படையில், குறித்த பிக்குகள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அநுராதபுரம் பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நேற்று(15) பிற்பகல் திருகோணமலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிக்குகள் இன்று(16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.