4.38 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளை கடத்த முயன்றவர் விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சுமார் 43.84 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருளைக் கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை சுங்க அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தொழில்நுட்பவியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தாய்லாந்தில் இருந்து இந்தப் போதைப்பொருள் தொகையைக் கொள்வனவு செய்துள்ளதாகவும், பின்னர் அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்று, இன்று நள்ளிரவு 12.00 மணியளவில் மலேசியா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விமான நிலையத்திற்கு வந்தடைந்த சந்தேகநபர், சுங்கத் தீர்வைக்கு உட்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என அறிவிக்கப்படும் 'பச்சை வழித்தடம்' ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளார்.
இதன்போது, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இணைந்து சந்தேகநபரின் இரண்டு பயணப் பொதிகளையும் சோதனையிட்டனர்.
அதில் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளுக்குள், 5 பொதிகளாக மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோகிராம் 384 கிராம் 'குஷ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.