அதிகாரிகளுடன் முரண்பட்ட போராட்டக்காரர்கள்.. லாஃப்ஸ் எரிவாயு விலை குறித்து இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (16) பிற்பகலுக்குள் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு இன்று முற்பகல் வருகை தந்திருந்த லாஃப்ஸ் எரிவாயு நிறுவன அதிகாரிகள் குழுவொன்றின் உறுப்பினர் ஒருவர், அதிகாரசபை வளாகத்தில் கூடியிருந்த போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் அந்நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, தமது விளக்கங்களை முன்வைப்பதற்காக நிறுவனப் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (16) காலை 10:00 மணியளவில் அதிகாரசபைக்கு வருகை தந்திருந்தது.
முன்னதாக, இம்மாதம் 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலைகளை அதிகரிக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன்படி, 4,965 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 6,740 ரூபா நிர்ணயிக்கப்பட்டது.
அத்துடன், 1,988 ரூபாவாக இருந்த 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாவினால் உயர்த்தப்பட்டு 2,720 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த எரிவாயு விலை உயர்வுக்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ள நிலையில், விலை குறைப்பு தொடர்பில் இன்று பிற்பகல் அந்நிறுவனம் வெளியிடவுள்ள அறிவிப்பு குறித்து அனைவரதும் கவனம் திரும்பியுள்ளது.
முதலாம் இணைப்பு
அபிமானி ஜனஜய கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று, மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர் ஒன்றை ஏந்தியவாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குள் நுழைய முற்பட்ட நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
நீல நிறம் பூசித் தாருங்கள்..
இதன்போது, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்றிற்காக அதிகாரசபை வளாகத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தமக்குக் கிடைத்த தகவலையடுத்தே, தாம் இந்த எரிவாயு சிலிண்டரைக் கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிவாயு சிலிண்டரை லாஃப்ஸ் நிறுவனப் பிரதிநிதிகளிடம் கையளித்து, அதற்கு நீல நிறம் பூசித் தருமாறு கோருவதே தமது நோக்கம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த குழுவினர் நுகர்வோர் அதிகாரசபை வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட வேளையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.




