நாமலுக்கு எதிராக இந்திய அதிகாரிகளிடம் சிஐடி பெறவுள்ள முக்கிய தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
குறித்த வழக்கில் சாட்சியாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் வினவி எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சிஐடிக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் பிரதிவாதியான நாமல் ராஜபக்சவும் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டிருந்தார்.