பிரித்தானியாவில் இந்திய விமானங்களுக்கு அனுமதி மறுப்பு! - லண்டனை வந்தடைந்த இறுதி விமானம்
பிரித்தானியா பயணத்டை விதித்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கடைசியாக திட்டமிடப்பட்ட விமானம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில், நாளை அதிகாலை 4 மணி முதல் அமுலாகும் வகையில் பிரித்தானியா இந்தியாவிற்கு பயணத்தடை விதித்துள்ளது.
இதன்படி, பிரித்தானியா அல்லது ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், அல்லது பிரித்தானிய குடியுரிமை கொண்டவர்கள் நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள், எனினும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் அவர்கள் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் தற்போது மிக வேகமாக கோவிட் - 19 தொற்று பரவி வருகின்றது. நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையிலேயே, பயண தடைவிதிக்கப்பட்டுள்ள நாடுகளின் "சிவப்பு பட்டியலில்" இந்தியாவை அண்மையில் பிரித்தானியா உள்வாங்கியது. 23ம் திகதி அதிகாலை 4 மணி முதல் இந்த தடை அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், குறித்த தடை அமுலுக்கு வரும் முன்னதாக திட்டமிடப்பட்ட இறுதி வணிக விமானம் (விஸ்டாரா விமானம் VTI017) - லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மேற்கு லண்டன் விமான நிலையத்தில் கூடுதலாக எட்டு விமானங்களை தரையிற்ற, நான்கு விமான நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், விமான நிலைய அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு கட்டுப்பாடுகள் காரணமாக அனுமதி மறுத்துள்ளதாகவும், அதிக பயணிகளை உள்ளே அனுமதித்து, நெருக்கடியை அதிகரிக்க விரும்பவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.