மியான்மார் தேர்தலில் இராணுவ ஆதரவு கட்சி முன்னிலை
மியான்மரில் இராணுவ ஆட்சியாளர்கள் நடத்தும் தேர்தல்களின் முதல்கட்ட வாக்குப்பதிவில், இராணுவ ஆதரவு பெற்ற முக்கிய அரசியல் கட்சி பெரும் முன்னிலை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்படுத்தப்பட்ட தேர்தல், ஆட்சியில் உள்ள கட்சியின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவைத் தொடர்ந்து, ஜனவரி 11 மற்றும் ஜனவரி 25 ஆகிய தேதிகளில் மேலும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன.
வாக்குப்பதிவு ரத்து
அதே நேரத்தில், 65 நகராட்சிகளில் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்சி முன்னிலை பெற்றுளள்தாக இராணுவத்துடன் நெருக்கமானதாக கருதப்படும் யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சியின் (USDP) மூத்த அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் போட்டியிட்ட இடங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களை யுஎஸ்டிபி கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தலைநகர் நெய்பிடாவில் உள்ள எட்டு நகராட்சிகளிலும் அந்தக் கட்சி வெற்றி பெற்றதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள்
எனினும், இருப்பினும், மியான்மர் ஐக்கிய தேர்தல் ஆணைக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ முடிவுகளை வெளியிடவில்லை. இந்தத் தேர்தல்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் கடுமையாக கண்டித்துள்ளார்.

கருத்து வேறுபாடுகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில் தேர்தல்கள் நடத்தப்படுவதாகவும், வேட்பாளர் பட்டியல்கள் பெரும்பாலும் இராணுவ ஆதரவாளர்களால் நிரம்பியுள்ளதாகவும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.