64 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணம்: கால்பந்தாட்ட விரிவாக்கம் குறித்து FIFA பரிசீலனை
48 அணிகள் பங்கேற்ற முதலாவது உலகக் கிண்ணக் கால்பந்து தொடர் நிறைவடைந்த நிலையில், வருங்காலத்தில் உலகக் கிண்ணத் தொடரை 64 அணிகளாக விரிவாக்கம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படலாம் என FIFA தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அது சர்வதேச கால்பந்தாட்டத்தின் நிதி மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கிண்ணத்தில் 64 அணிகள் பங்கேற்கும் போது, முன்னணி நாடுகள் தகுதி பெறுவது எளிதாகும்.
இதனால் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையின் வணிக மதிப்பு குறையக்கூடும். இதன் காரணமாக பிராந்திய கால்பந்து கூட்டமைப்புகள் நிதித்தேவைகளுக்காக FIFA அமைப்பை அதிகளவில் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். இது FIFA அமைப்பின் நிதி ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் மேலும் அதிகரிக்கும்.
போட்டிகளின் எண்ணிக்கை
இருப்பினும், ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு ஆகியவை இந்த விரிவாக்க யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 64 அணிகள் பங்கேற்றால் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 128 ஆக உயரும். இது கடந்த காலங்களை விட இருமடங்காகும்.

இதனால் போட்டிகளை நடத்த கூடுதல் மைதானங்கள், ஹோட்டல்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும். 2030 உலகக் கிண்ணத்தை ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இணைந்தும், 2034 உலகக் கிண்ணத்தை சவுதி அரேபியாவும் நடத்தவுள்ள நிலையில், இவ்வளவு பெரிய தொடரை நடத்துவது பெரும் சவாலாக அமையும்.
போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வீரர்களின் பணிச்சுமை அதிகரித்து காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தொடர் நீண்ட நாட்கள் நடைபெறுவதால் பங்கேற்கும் நாடுகளின் கால்பந்து சம்மேளனங்களுக்கு தங்குமிடம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் கணிசமாக உயரும்.
சிறிய நாடுகளுக்கு உலக மேடையில் வாய்ப்பு கிடைத்தாலும், போட்டியின் தரம் மற்றும் முக்கியத்துவம் குறையக்கூடும் என்ற கவலையும் விளையாட்டு வல்லுநர்களிடையே எழுந்துள்ளது.