எரிபொருள் கொள்வனவில் கட்டுப்பாடு : போக்குவரத்து சேவைகள் முடக்கம் (Video)
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள், வாகன சாரதிகள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் இன்மையால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரி பொருள் இன்மையால் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அதே நேரம் போக்குவரத்து சேவைகளும் முடக்கமடைந்துள்ளது.
அரச அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளும் பெற்றோல் இன்மையால் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
வவுனியா
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் அணிவகுத்து நிற்பதுடன், அதிகளவு தூரம் வரை எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு எரிபொருளை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வழங்கி வருவதாகவும் எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் வவுனியா எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.








