பதின்ம வயது மாணவனிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியைக்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை
மொனராகலை பிரதேசத்தில் பதின்ம வயது மாணவனொருவனிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியை ஒருவருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி, மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆசிரியை ஒருவர் தன்னிடம் கல்வி கற்ற 14 வயது பாடசாலை மாணவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலாத்காரமாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்தார்.
குறித்த சம்பவம் வெளியில் தெரிய வந்ததைஅடுத்து, சட்டமா அதிபரால் 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்கம், 1998 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்கம் மற்றும் 2006 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க திருத்தச் சட்டங்களின் பிரகாரம் தண்டனைச் சட்டக்கோவையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குறித்த ஆசிரியைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீண்ட விசாரணையின் பின்னர் 38 பக்கங்களைக் கொண்ட வழக்கின் தீர்ப்பு, கடந்த 6 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டபோது, குறித்த ஆசிரியை மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் நலம் பெற்று, கடந்த 8 ஆம் திகதி வழக்கு மீண்டும் அழைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறைத்தண்டனை
14 வயது சிறுவன் ஒருவரை (பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட குறித்த ஆசிரியைக்கு 24 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி விஜேசேகர தீர்ப்பளித்துள்ளார்.

ஆசிரியைக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு தலா 8 ஆண்டுகள் வீதம் மொத்தம் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும், அந்தத் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கும் வகையில் (ஏக காலத்தில்) 8 ஆண்டுகளுக்கு மாத்திரம் சிறைத்தண்டனையை அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குற்றவாளிக்கு 50இ000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 250,000 ரூபாய் வீதம் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் மொத்தம் 750,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நஷ்டஈட்டுத் தொகையை செலுத்தத் தவறின் மேலதிகமாக ஒரு வருட சிறைத்தண்டனையும், அபராதத் தொகையை செலுத்தத் தவறின் மேலும் ஒரு வருட இலகு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.