பயம் இல்லாவிட்டால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! அரசிடம் சஜித் வலியுறுத்து
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் செயலாகும் எனவும், இது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதுடன் நாட்டின் இறைமையை மீறும் செயலாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(11) வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சஜித் வலியுறுத்து
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
"மாகாண சபைத் தேர்தலை நடத்துவதைத் தடுப்பதற்காகவே மாகாண சபைகள் தேர்தல் முறைமை தொடர்பான குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் குழுவின் கால அவகாசத்தை எந்தக் காரணம் கொண்டும் நீடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.
கால அவகாசத்தை நீடிப்பது என்பது மக்களுக்கு மாகாண சபை தேர்தலை நடத்தும் வாய்ப்பை முற்றாக இழக்கச் செய்வதாகும். இவ்வேளையில் நிகழ வேண்டியது இந்தக் குழுவின் கால அவகாசத்தை நீட்டிப்பதல்ல, மாறாக மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதே ஆகும்.

அரசுக்கு மக்கள் மத்தியில் பயம் இல்லாவிட்டால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். புதிய முறைமை தாமதமானால், குறைந்தபட்சம் பழைய முறையின் கீழாவது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்.
மாகாண சபை தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைப்பதற்காக இந்தக் குழுவின் கால அவகாசத்தை நீடிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது
நாட்டு மக்களின் இறைமையை இது கடுமையாக மீறுவதால், ஜனநாயகத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.