தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வு
தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 47ஆவது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையும் யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஓய்வுநிலை ஆயர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் இன்று (26.04.2024) நடைபெற்றுள்ளது.
நினைவுப் பேருரை
இதில் தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்துள்ளதுடன் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த நிகழ்வில் நினைவுப் பேருரையினை யாழ். பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் திணைக்கள பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் “இலங்கை தமிழ் தேசிய இனத்தின் விடுதலைக்கான வாய்ப்புக்களும் சவால்களும்” என்னும் கருப்பொருளில் உரையாற்றியுள்ளார்.
நினைவேந்தல் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், தந்தை செல்வா நினைவு அறக்காவற் குழுவின் உபதலைவர் குலநாயகம், சோ.மாவைசேனாதிராஜா, வட மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.சிவஞானம், உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜி
தெல்லிப்பழை
தந்தை செல்வாவின் 47 ஆவது ஆண்டு நினைவேந்தல் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தெல்லிப்பழையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் தூபியில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ,முன்னாள் பேராயர் ஜெபநேசன் தலைமையில் பிரார்த்தனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தந்தை செல்வாவின் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி ஈகை சுடரும் ஏற்றப்பட்டது.
இதன்போது, செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையினர், தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி - பிரதீபன்
மட்டக்களப்பு
இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 47ஆவது நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் நினைவு பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின் நினைவுரைகளும் நடைபெற்றுள்ளன.
நினைவேந்தல நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணியினர், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செய்தி - ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |