கிளிநொச்சியில் கோர விபத்து - மூன்று நாட்களுக்கு பின் உயிரிழந்த மாணவன்
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் பரந்தன் பகுதியில் தனது சைக்கிளில் வழமை போன்று பயணித்துக் கொண்டிருந்தபோதே கடந்த 17ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் மாணவன் உயிரிழப்பு
மாணவனின் சைக்கிளுக்குப் பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சைக்கிள் மீது மிகக் கொடூரமாக மோதித் தள்ளியுள்ளது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவனை, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அது பலனளிக்காமல் மாணவன் உயிரிழந்துள்ளார்.
விபத்துத் தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரைக் கிளிநொச்சி பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளின் அதிவேகமே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.